தீயில் கருகிய கிரென்ஃபெல் டவர் கட்டடத் தொகுதியை பிரதமர் நேரில் பார்வையிட்டார்

மேற்கு லண்டனில் தீயில் கருகி சேதமடைந்துள்ள கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி கட்டடத் தொகுதியை இன்று (வியாழக்கிழமை) பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தெரேசா மே கலந்துரையாடியுள்ளார். இதனை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மேற்கு லண்டன் கென்சிங்டன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி கட்டடத் தொகுதி நேற்று புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 34பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 18 பேரில் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்