மக்களின் ஆதரவுடன் வட மாகாணத்தை ஆளுவேன்: சி.வி. (நல்லூர் ஆலய முன்றலிலிருந்து முதல்வர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணி)

வட  மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சர் சி.வி.க்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

‘நீதியரசருக்கு நீதி இல்லையா’, ‘தமிழ் மக்களின் மூச்சு சி.வி.’ ‘தமிழ் மக்களின் எழுச்சி சம்பந்தனுக்கு அதிர்ச்சி’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

 

மக்களின் ஆதரவைக்கொண்டு தொடர்ந்து வட. மாகாணத்தை ஆட்சி செய்வேன் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய முன்றலிலிருந்து முதல்வர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், எனக்கு பின்னால் நீங்கள் இருப்பதை பார்க்கும்போது நான் செல்லும் பாதை சரி என்று எனக்கு தோன்றுகின்றது.

உங்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன் என்பதை இங்கு உறுதிபட தெரிவிக்கின்றேன். உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்