முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள பிரதான வீதிகளை அண்மித்து வாகனங்களை முறையற்ற விதத்தில் நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு நகர எல்லைப் பகுதிக்குள் முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்தி வைப்பதன் காரணமாகவே அதிக வாகன நெரிசல் ஏற்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாரதிகளும் பாதசாரிகளும் வீதி ஒழுங்குமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பதற்கு போக்குவரத்து சட்டத்திட்டங்களை தீவிரமாக அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் படி 7 ஆயிரத்து 456 போக்குவரத்து குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்