லண்டன் பிறிட்ஜ் தாக்குதல்: சந்தேகநபர்கள் விடுதலை!

லண்டன் பிறிட்ஜ் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இறுதியாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..

ஸ்கொட்லாந்து யாட் பொலிஸ் தகவல்களின் பிரகாரம், கடந்த 9 ஆம் திகதி கிழக்கு லண்டனில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை கடந்த 10 ஆம் திகதி 28 மற்றும் 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து யாட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி விசாரணையின் ஒரு பகுதியாக கைதுசெய்யப்பட்ட 17 சந்தேகநபர்களும் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இம்மாதம் வரையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணைக்காலம் நிறைவடைந்ததும் மத்திய லண்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவேண்டும்.

லண்டன் பிறிட்ஜ் மற்றும் பெருநகர சந்தைப் பகுதியில் இம்மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி பயங்கரவாத தாக்குதலில் எட்டுபேர் உயிரிழந்ததுடன் பெருமளவானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்