தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பல கூறுகளாக தகர்த்தெறிய வேண்டும் என்று பல தீய சக்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்பட்டு வருகின்றனர்:எம்.இராஜேஸ்வரன்

தமிழ் மக்களின் ஒரேயொரு அரசியல் பலமாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பல கூறுகளாக தகர்த்தெறிய வேண்டும் என்று பல தீய சக்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தீனி போடுபவர்களாக எமது தமிழ் அரசியல் தலைமைகள் இருந்து விடக் கூடாது என்று வினயமாக கேட்டுக் கொள்வதுடன் எமக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சுமூகமான முறையில் பரஸ்பரம் விட்டுக் கொடுப்புடன் பேசித் தீர்த்துக் கொள்வதே இன்றுள்ள ஒரேயொரு வழியாகும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
பாண்டிருப்பு சக்தி முன் பள்ளிப் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு எம்.இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள பழந்தமிழ்க் கிராமங்களுள் ஒன்றாக விளங்கும் பாண்டிருப்பு கிராமம் பல வழிகளிலும் சிறப்புப் பெற்ற கிராமம் ஆகும். கடந்த கால போர்ச்சூழல் காரணமாக எண்ணிப்பார்க்க முடியாத உயிர் இழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் சந்தித்த கிராமம்.
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று சுனாமிப் பேரலையால் மேலும் பல உயிர் இழப்புக்களையும், உடைமைகளையும் பாண்டிருப்பு மக்கள் இழந்து தவிர்த்தனர். இந்நிலையில் இக்கிராமத்தை முடியுமானவரை அபிவிருத்தி செய்ய வேண்டியது அரசியலில் உள்ளவர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரின் உதவியைநாடி இங்கு ஓர் ஆயள்வேத வைத்தியசாலையை திறப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளேன். இதே போன்று அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் மனங்களில் அழியாது நிறைந்து வாழும் அமரர். வேல்முருகு அவர்களின் தமிழ் பற்றுக்கு தலை வணங்கி அன்னாரின் பெயரில் சிறுவர் பூங்காவை சிறப்பான முறையில் அமைத்து வருகின்றேன்.
ஒரு பிள்ளையினுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் கருவியாக கல்வி அமைந்துள்ளது. அதிலும் தாய், தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்து வேறு ஒரு சூழலுக்கு செல்லும் மாணவர்களுக்கு விளையாட்டின் மூலம் நல்லொழுக்கத்தையும், கல்வியையும் வழங்கும் இடமாகவும் இப்பிள்ளைகளிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் இடமாகவும் முன்பள்ளிகள் உள்ளதை எம்மால் காண முடிகின்றது. இத்தகைய பணியை பாண்டிருப்பு சக்தி முன்பள்ளி ஆசிரியைகள் சிறப்பாக மேற்கொண்டதை மனதாரப் பாராட்டுகின்றேன்.
இன்று நடைபெற்ற முன்பள்ளி விளையாட்டைப் போன்று எதிர்காலத்தில் மேலும் பல ஆக்க பூர்வமான நிகழ்வுகளை நீங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் எனது ஆதரவு என்றும் இருக்கும்.
பல்வேறுபட்ட இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களை அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்கான நற்காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். இதனைவிடுத்து சிறிய விடயங்களை பெரிதாக்கி சமூக ஒற்றுமையை சீர் குலைப்பதை அனுமதிக்க முடியாது. சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக யாராவது ஊழல் மேசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை சரியான அணுகுமுறையில் தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.
எனவே நாம் ஒன்றுபட்ட சக்தியாக இருந்து செயற்பட்டால் மட்டுமே எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள், எண்ணங்கள், அபிலாசைகள், என்பவற்றை நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்