பாகிஸ்தானுடனான தோல்வி ஏமாற்றத்தை அளிக்கிறது: விராட் கோஹ்லி

பாகிஸ்தான் அணியுடனான தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மினி உலக கிண்ணம்’ என்று அழைக்கப்படும் 8-வது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில், பரம எதிரிகளாக நோக்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் மோதின.

இதில் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த விராட் கோஹ்லி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இத்தோல்வியானது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனாலும் எனது முகத்தில் சிரிப்பு இருக்கிறது. நமது வீரர்கள் இந்த தொடரில் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும். எல்லா வகையிலும் எங்களை தோற்கடித்து விட்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள்!

கிரிக்கெட்டில் சில நேரம் சிறு விடயம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் இப்போது நாங்கள் தோற்று விட்டோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்