உத்தியோகபூர்வ பிரெக்சிற் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் வரலாற்று முக்கியத்துவமான பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் குறித்த பேச்சுவார்த்தைக்கு பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் தயாராக உள்ள நிலையில், இன்று ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் முறைப்படி ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரஸ்சல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி 11.00 மணியளவில் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் போது பிரித்தானியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் நிலை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான விடயங்கள் மற்றும் வடக்கு அயர்லாந்து எல்லை விவகாரம் ஆகியன தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்படும் குறித்த பேச்சுவார்த்தைகள் முறைப்படி முன்னெடுக்கப்பட்டு  எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்