பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் ரகசிய விஜயம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் குறித்து பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் எதிர்வரும் வாரம் பிரித்தானியாவுக்கு ரகசிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் சில நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட செய்திகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திகளின் படி, ட்ரம்ப் ஐரோப்பாவுக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் ஒரு அங்கமாக அவர் ஸ்கொட்லாந்தில் உள்ள ரேர்ன்பர்ரி (Turnberry) கொல்ஃப் உல்லாசப்பூங்காவிற்கு ரகசிய விஜயம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வார இறுதியில் ஜேர்மனியில் நடத்தப்படவுள்ள ஜி – 20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு ஹம்பேர்க் செல்லவுள்ள ட்ரம்ப், அதன் பின்னர் பிரான்ஸின் தேசியதின விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரான்ஸிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் பிரித்தானியாவுக்கு முறைசாரா விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு அதிகளவான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் முன்னதாக பிரித்தானியா முழுவதிலும் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு எதிர்ப்பு தெரிவித்து மனுவொன்றும் கைச்சாத்திடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்