“அன்று குன்ஹா! இன்று குட்கா” காஞ்சிபுரத்தில். அதிமுக.வை காய்ச்சி வடிகட்டிய ஸ்டாலின்…

ஆளும் அ.தி.மு.க. குழப்ப கூடாரமாக இருக்கும் நிலையில், தமிழக மக்களின் எதிர்கால நம்பிக்கையாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தி.மு.க. போராடி வருகிறது. அதிலும் ஸ்டாலினின் டூட்டி 24 x 7 என்றுதான் போய்க் கொண்டிருக்கிறது.
தி.மு.க.வை அதிகபட்ச அரசியல் வைபரேஷனோடு வைத்திருந்த கருணாநிதி கூட அதிகாலை நேரங்களையும், அந்திமாலை நேரங்களையும் தன்னுடைய இலக்கிய பணிகளுக்காக செலவிட்டார். ஆனால் ஸ்டாலின் அப்படியல்ல தன்னுடைய 24 மணிநேரங்களையும் கழக பணியிலேயே கரைத்துக் கொண்டிருக்கிறார்.
கருணாநிதி போல் இவரென்ன இலக்கியவாதியா? என்று யாரும் கேட்டுவிட முடியாது. ஸ்டாலின் நினைத்தால் தன் மகன் உதயநிதியின் சினிமா தயாரிப்பு நிறுவனத்திலோ அல்லது மகள் செந்தாமரை நடத்தும் பள்ளியிலோ போயமர்ந்து தன்னை தினமும் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். அட இவ்வளவு ஏன் தனது மனைவி துர்காவுடன் வாரம் இரண்டு கோயில்களுக்கு ‘மரியாதை நிமித்தமாக’ கூட வலம் வந்து தன்னை புத்துணர்வாக்கிக் கொள்ளலாம். ஆனால் இவை எதையும் என்கரேஜ் செய்யாமல் கழகப்பணியே வாழ்க்கை என்று போய்க் கொண்டிருக்கிறார்.
இதனால்தான் ஸ்டாலின் பல நேரங்களில் ஏக சிடுசிடுப்பாய் இருந்துவிடுகிறார். கழக சீனியர்களால் கூட அவரை நெருங்க முடிவதில்லை. தொடர் அரசியல் பணிகள் கொடுக்கும் அழுத்தம் அவரை சகிப்புத்தன்மையின் விளிம்புக்கே தள்ளிச் செல்வதால் கழகத்தினர் மீது கடுப்பாகிறார் சில நேரங்களில்.
இந்த நிலையில்தான் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. என்னவோ புரியவில்லை இனம்காணா சந்தோஷத்துடனே இதில் கலந்து கொண்டார் ஸ்டாலின். பேச்சிலும் செம துள்ளல். ஒருகாலத்தில் தங்களது ஆட்சியை ‘மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி’ என்று ஏளனம் பேசிய அ.தி.மு.க.வை, சமீப காலமாக ‘பினாமி அ.தி.மு.க. அரசு’ என்று பதில் ஏளனம் செய்த ஸ்டாலின் தற்போது அதை ‘குதிரைபேர அரசு’ என்று புது பெயர் சொல்லி விமர்சிக்க துவங்கியுள்ளார்.
மேடையில் மைக் பிடித்த ஸ்டாலின் “தமிழகத்தில் நடப்பது ஆட்சியல்ல, காட்சிதான். குதிரைபேர ஆட்சியை தமிழகத்தில் ஓட்டிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. இது எந்த நொடியிலும் தலைகுப்புற கவிழும். அதன் பின் அரியணை ஏறப்போவது நம் கழகம்தான். கடந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதிப்படி நமக்கும் அவர்களுக்குமான வாக்குவித்தியாசம் வெறும் 1.1 சதவீதம்தான். ஆனால் தற்போது தமிழக மக்கள் இவர்கள் மீது 100% வெறுப்பிலிருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடுகிறது, செயல்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு முன்பாக நாம்தானே ஏரி, குளங்களை தூர்வார துவங்கினோம். எதிர்கட்சி நல்ல காரியம் செய்கிறதே என்று அதன் பிறகு பொறாமையோடு தூர்வாரலில் குதித்தார் எடப்பாடி.
எழுபது நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு என்னவிதமான சிகிச்சைகள் தரப்பட்டன என்று எந்த விபரமும் தெரியவில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆகியோரின் சிகிச்சை விபரங்கள் பற்றி தினம் தினம் அறிக்கைகள் வந்தன.
நம் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கூட நாம் அறிக்கையோடு தலைவரின் புகைப்படத்தையும் வெளியிட்டோமே! ஆனால் ஜெ., விஷயத்தில் அவரது மரணத்துக்கு நீதிவிசாரணை கேட்குமளவுக்கு ஏதோ நிகழ்ந்திருப்பதாக பதவி பறிக்கப்பட்ட பன்னீர்செல்வம் குமுறுகிறார் என்றால் யோசித்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆட்சியின் தலைமையை அன்று குன்ஹா சிறைக்கு அனுப்பினார், ஆனால் இந்த ஆட்சியை இன்று குட்கா ஜெயிலுக்கு அனுப்பப்போகிறது. பல தரப்பு மக்களின் நலனை அலசிப்பார்க்காமல் அவசரகோலத்தில் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை இந்த குதிரைபேர அரசு எதிர்க்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.
லஞ்சம் வாங்கியதாக டி.ஜி.பி. மீதே புகார் வந்திருக்கிறது. இது மிக புதுசு. இந்த குதிரைபேர ஆட்சியில் நிர்வாகம் இப்படித்தான் சீரழிந்து கிடக்கிறது. இந்த ஆட்சியை நாம் கலைக்க வேண்டாம். தானாகவே அது கவிழும்.” என்று புன்னகையோடு முடித்தபோது தொண்டர்களின் கைதட்டல் அடங்கி அமைதியாக வெகுநேரம் பிடித்தது.
கலக்குறேள் தளபதி!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்