இப்படியுமாடா பழி வாங்குவீங்க?

இரட்டை பிரஜா உரிமை பெற்ற மஹிந்த அணி எம்பி கீதாவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து யாரெல்லாம் இரட்டை பிரஜா உரிமையை வைத்துள்ளார்களோ அவர்கள் எல்லாம் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.

தாமும் இரட்டைப் பிரஜா உரிமை வைத்திருப்பதைத் தெரிந்துகொண்டு யாரெல்லாம் நீதிமன்றம் செல்லப் போகிறார்களோ;எப்போது நம்ம சீட் கிழியுமோ என்ற அச்சத்தில்தான் அவர்கள் காலத்தைக் கடத்திக்கொண்டு செல்கின்றனர்.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகு தமது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இவருக்கும் இரட்டை பிரஜா உரிமை உண்டு;அவருக்கும் இரட்டை பிரஜா உரிமை உண்டு என்று கண்டபடி கதையைக் கட்டிவிடுகிறார்களாம் அந்தப் பக்கிகள்.

அவ்வாறான பக்கிகளிடம் சிக்கியவர்களுள் நம்ம மஹிந்த அணியின் தூண் டளஸ் அழகப்பெருமவும் ஒருத்தர்.சந்திரிக்காவின் ஆட்சியில் அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி அமெரிக்காவுக்குப் போய் அங்கேயே நீண்ட காலம் தங்கினார் டளஸ்.

மஹிந்த பிரதமரானதும் அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து எம்பி பதவி கொடுத்து மீண்டும் அவரை அரசியலில் இறக்கினார் மஹிந்த.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தில் இரட்டை பிரஜா உரிமையை வைத்திருப்பவர்கள் எம்பி பதவியை வகிக்க முடியாது கூறப்பட்டிருப்பதால் மஹிந்தவின் அரசியல் எதிரிகள் அவ்வாறானவர்களைத் தேடிப் பிடித்து சிக்கலில் தள்ளத் தொடங்கினர்.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக டளஸ் அழகப்பெரும வேட்பு மனுத் தாக்கல் செய்த நேரத்தில் அவர் இரட்டை பிரஜா உரிமை உடையவர் என்று கூறி அவரின் வேட்பு மனுவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.தான் இரட்டை பிரஜா உரிமை பெறாதவன் என்று நிரூபிக்கப்பட்ட பின்பே அவரது நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இருந்தும்,அவர் இரட்டை பிரஜா உரிமை பெற்றவர் என்றும் அவர் வென்றாலும் அந்தப் பதவி பறிபோய்விடும் என்றும் தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்யப்பட்டதால் அவர் ஏறும் மேடைகளில் கடவுச் சீட்டுடன் ஏறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால்,இப்போது கீதாவின் விவகாரத்துக்குப் பின் அதே பழைய பிரச்சாரத்தைக் கொண்டு மீண்டும் டளஸை வம்புக்கு இழுக்கிறார்களாம் அவரது அரசியல் எதிரிகள்.இதனால் போகுமிடமெல்லாம் மீண்டும் கடவுச் சீட்டுடன் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம் அவர்.

அவர் முதன் முதலாக அமெரிக்காவுக்குச் சென்றது மாணவர் வீசாவில் இறுதியாகச் சென்றது சுற்றுலா வீஸாவில் என்று டளஸ் கூறுகின்றார்.

போன தை பூஜைக்கு அடிச்சவன இந்த தை பூஜையில தேடுற மாதிரி இப்படியுமாடா ஒருத்தன இப்படியுமாடா பழி வாங்குவீங்க?

[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்]

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்