இந்திய பெண்கள் அணி பரிதாப தோல்வி

பிரிஸ்டல்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ். இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பூணம் ராத் சதம் வீணானது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்தாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது.

நேற்று தனது ஆறாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லான்னிங், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 

 

மந்தனா ஏமாற்றம்:

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, பூணம் ராத் ஜோடி, மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தது. தடுமாறிய மந்தனா, 3 ரன்னுக்கு அவுட்டானார். பின் கேப்டன் மிதாலி ராஜ், பூணம் ஜோடி இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர்.

மிதாலி அபாரம்:

இருவரும் ஒன்றும் இரண்டுமாக ரன்கள் சேர்க்க, ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. பின் சற்று வேகம் காட்டிய மிதாலி ராஜ், பீம்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இருப்பினும், இந்திய அணி 29.3 ஓவரில் தான் 100 ரன்களை கடந்தது.

மிதாலி ராஜ் 34 ரன் எடுத்த போது ஒருநாள் அரங்கில், அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்த நிலையில், மிதாலி ராஜ் (69 ரன், 114 பந்து) அவுட்டானர்.

பூணம் சதம்:

ஜோனாசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பூணம் ராத், ஒருநாள் அரங்கில் இரண்டாவது சதம் அடித்தார். ஹர்மன்பிரீத் கவுர் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் ஒரு வழியாக 200 ரன்களை கடந்தது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், பூணம் ராத் (106 ரன், 136 பந்து), வேதா (0) அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகினர்.

ஹர்மன்பிரீத் கவுர் 23 ரன்னுக்கு வெ ளியேறினார். கோஸ்வாமி (2) நீடிக்கவில்லை. இந்திய பெண்கள் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது.

கேப்டன் விளாசல்:

எட்டக் கூடிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு போல்டன், மூனே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த போது, போல்டன் (36) அவுட்டானார். மூனேயை (45), தீப்தி சர்மா ரன் அவுட் செய்த போதும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

மெக் லான்னிங் அரைசதம் அடிக்க, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. கடைசியில் கோஸ்வாமி பந்தை பெர்ரி பவுண்டரிக்கு விரட்ட, ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எல்ஸ் பெர்ரி (60), மெக் லான்னிங் (76) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

அரையிறுதிக்கு சிக்கல்

பெண்கள் உலக கோப்பை தொடரில் மொத்தம் பங்கேற்கும் 8 அணிகளில் ‘டாப்–4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். இப்போதைய நிலையில் இங்கிலாந்து (10), ஆஸ்திரேலியா (10),  தென் ஆப்ரிக்கா (9) என, மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

அடுத்த இரு இடத்தில், இந்தியா (8), நியூசிலாந்து (7) அணிகள் உள்ளன. வரும் 15 ம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நான்காவதாக அரையிறுதிக்கு செல்லும். இதனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்