மலேசியாவில் 12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

மலேசியாவில் முறையாக பதிவுச்செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு அக்கெடு முடிந்ததையடுத்து மலேசிய குடிவரவுத்துறை எடுத்த நடவடிக்கைகளில் இதுவரை 3,323 தொழிலாளர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 1,230 பங்களாதேஷிகள், 825 இந்தோனேசியர்கள், மியான்மரைச் சேர்ந்த 273 பேர், வியட்னாமைச் சேர்ந்த 119 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 123 பேர், பிலிப்பைன்சைச் சேர்ந்த 95 பேர் உள்ளடங்கியுள்ளனர்.
ஏற்கனவே மலேசிய குடிவரவுத்துறை தடுப்பு முகாம்கள் நிரம்பி வழியக்கூடிய சூழலில் மேலும் ஆயிரக்கணக்கானோர் அதே முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளமைக் குறித்து தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு கவலைக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவ்வமைப்பின் உறுப்பினர் முய் சோச்ஹு,“பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கை, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மேலும் பாதிக்கக்கூடிய நடவடிக்கையாக மாறக்கூடாது. இச்சிக்கலில் மலேசிய அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை உள்ளதென்றாலும் எல்லா நேரங்களிலும் எல்லா மக்களிற்கும் அடிப்படை மனித உரிமைகளை அளிப்பது பற்றியும் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான புதிய திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத 161,000 தொழிலாளர்கள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு கடுமையான வேலைகளை செய்யும் தொழிலாளர்களாக விசாயின்றி மலேசியாவில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள 3,323 தொழிலாளர்களும் இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் தான். இவர்களை வேலைக்கு அமர்த்தியக் குற்றத்திற்காக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 63 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
படம்: AFP
போர்ட் டிக்சன் என்ற பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்