சவுதி அரேபியா பிரித்தானியாவில் பயங்கரவாதத்தை தூண்டுகிறது: முன்னாள் தூதுவர்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சவுதி அரேபியா பயங்கரவாதத்தை தூண்டுவதாக சவுதி அரேபியாவுக்கான பிரித்தானிய தூதுவர் வில்லியம் பாட்டே தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பு குறித்து உள்துறை அமைச்சுக்கு பிரித்தானிய அரசாங்கம் அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சவுதி, பயங்கரவாத குழுக்களுக்கு நேரடியாக நிதியளிக்கின்றது என்பதை தான் நம்பவில்லை என்றும் எனினும் சவுதியின் நடவடிக்கைகள் ஐ.எஸ் சார்ந்த கொள்கைகளை ஆதரிப்பதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சவுதி பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவில்லை. அவர்கள் வேறு தேவைகளுக்காக நிதியளிக்கின்றனர். அது பயங்கரவாதத்திற்கு இரையாகின்றது’ என்றும் குறிப்பிட்டார்.

பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பு தொடர்பிலான முழுமையான ஆதராங்களை வெளியிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறிருக்க பிரித்தானியாவில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கான சவுதி அரேபியாவின் நிதியளிப்பு குறித்து வெளிப்படையாக தெரிவிக்க தெரேசா மே அரசாங்கம் மறுப்பதாக பசுமைக் கட்சியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரோலின் லுகாஸ் குற்றம்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்