போர்க்குற்றவாளிகளான படையினரை நீதியின் முன்னிறுத்தவில்லை இலங்கை!

போர்க்குற்றவாளிகளான படையினரை நீதியின் முன்னிறுத்தவில்லை இலங்கை! – கடுமையாகச் சாடுகின்றார் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் (photo)
ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகின்றதென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  மனித உரிமைககள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் பணிமனையில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பின்னர் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டதிலும் ஏற்கனவே நான்கு மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், தீர்மானத்தின் முக்கிய இலக்குகளை அடைவதில் முன்னேற்றம் என்பது மந்த கதியிலேயே உள்ளது மட்டுமன்றி அது ஏறத்தாழ முடக்கப்பட்ட நிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகின்றது.
இலங்கையில் நிலைமாற்றுகால நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை காலத்தில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையுமே நிலைமாற்றுகால நீதியை நிறைவேற்றும் விடயத்தில் உண்மையான முன்னேற்றம் காண்பதற்குப் போதுமானதாகக் காணப்படவில்லை.
போர்க்குற்றங்களை இழைத்த குற்றவாளிகளான இலங்கைப் படையினரை நீதிக்கு முன்பாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் சிறியளவிலான சான்றுகளைக் கூட காணமுடியாமல் உள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்