பிக் பாஸ் நிகழ்ச்சியில் 75% நிர்வாண நடிப்பு : நிகழ்ச்சியை தடை செய்து கூண்டோடு கைது செய்ய புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், 75% நிர்வாணமாக நடித்து வருவதால், நிகழ்ச்சியை தடை செய்து, கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.

அவர்கள் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

இந்திய மக்கள், மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள். இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் உச்சக்கட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் எவ்வித தொடர்பும் இல்லாத ஏழு ஆண்களும் ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75% நிர்வாணமாகவும், நடித்து வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தொலைகாட்சியை பார்த்து வரும் சூழலில், இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமீதா, ஓவியா, காயத்திரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சா கருப்பு, வையாபூரி, சக்தி, ஆருள், பரணி, சினேகன், கணேஷ் போன்ற 14 பேர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து, தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்