விம்பிள்டன் பட்டத்தை வென்று `சாதனை நாயகன்’ ஆனார் ரோஜர் பெடரர்

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து களமிறங்கிய மரின் சிலிக்கை 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று ரோஜர் பெடரர் விம்பிள்டன் கோப்பையை வென்றார்.

இன்றைய இறுதிப் போட்டியின் துவக்கம் முதலே பெடரர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ரோஜர் பெடரருக்கு பெரிதும் சவால் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மரின் சிலிக் தனது ஆட்ட பங்களிப்பில் ஏமாற்றம் அளித்தார்.

முதல் செட்டில் ஆரம்பத்திலேயே மரின் சிலிக்கின் சர்வ்வை, ரோஜர் பெடரர் முறியடித்தார். இரண்டாவது செட்டில் மூன்று முறை மரின் சிலிக்கின் சர்வ்வை ரோஜர் பெடரர் முறியடித்தார்.

இதனால், இரண்டாவது செட்டை மிக எளிதாக 6-1 என்று ரோஜர் பெடரர் வென்றார். மூன்றாவது செட்டில் மரின் சிலிக் சற்றே சவால் அளித்த போதும் 6-4 என்று வென்று ரோஜர் பெடரர் தனது 8-ஆவது விம்பிள்டன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.

35 வயதாகும் ரோஜர் பெடரர் வென்றுள்ள 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

2017-ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம், ஆண்கள் பிரிவில் மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை ரோஜர் பெடரர் படைத்துள்ளார்.

விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையும் ரோஜர் பெடரருக்கு கிடைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்