தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் மஹிந்த அணியோடு சங்கமிக்காது சு.க.! – சுயாதீனமாக இயங்கவே 18 உறுப்பினர்களும் அனுமதி கோரினர் என்கிறார் அமரவீர

“தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியில் இணையமாட்டார்கள்”  என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது விடயம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக சு.கவின் மத்திய செயற்குழு விரைவில் கூடும் எனவும் அவர் கூறினார்.
தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா உட்பட 18 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தயார்நிலையில் இருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜோன் செனவிரதன, “அரசில் இருக்கும்வரை சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தமுடியாது. எனவேதான், அதிலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்வதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது.
தேசிய அரசின் ஒப்பந்தம் டிசம்பரில் முடிவதால் அதுவரை பொறுமைகாக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இது பற்றி பரீசிலினை செய்துவருகின்றோம்” – என்று கூறினார்.
எனினும், “டிசம்பர் மாதம்வரை பொறுத்திருக்கமுடியாது. பிரதமர் பதவியை ஜனாதிபதி சு.க. உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையேல் வெளியேறுவதைதவிர வேறு வழியில்லை”  என்று பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரிடம் வினவியபோது,
“ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது, இரண்டுபேர் மாத்திரமே அரசிலிருந்து வெளியேறவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அதுவும் சுயாதீனமாக இயங்கப்போவதாகவே அவர்கள் குறிப்பிட்டனர். மாறாக, சு.கவிலிருந்து செல்பவர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியுடன் இணையமாட்டார்கள்.
எது எப்படியிருந்தபோதிலும் தேசிய அரசுடனான உறவு குறித்து எந்தவொரு நபரும் தனிமுடிவை எடுக்கமுடியாது. இது விடயத்தில் கூட்டு பொறுப்பு இருக்கின்றது. மத்திய குழுவின் ஊடாகத்தான் தீர்மானமெடுக்கவேண்டும். இதற்காக மத்தியகுழுக் கூட்டம் கூடவுள்ளது” – என்றார்.
அதேவேளை, ஒருதொகுதி சு.க. உறுப்பினர்கள் தேசிய அரசைவிட்டு விலகினாலும் ஏனைய சு.க. உறுப்பினர்கள் தேசிய அரசில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பார்கள் என அறியமுடிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்