அரசியல் வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க்!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

அரசியல்வாதியாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பினை தனது மகன் சகிதம் நடாத்திய 51 வயதான கிறிஸ்டி கிளார்க், இச்சந்திப்பின் போது உருக்கமான கருத்துக்களையும் வெளியிட்டார்.

நீண்ட காலமாக ஆட்சியில் இருந்துவந்த லிபரல் கட்சி நடைபெற்றுமுடிந்த தேர்தலில் தோல்வியை தழுவியபோதே அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் மனோநிலை தனக்கு ஏற்பட்டதாகவும், எனினும் அவ்வாறானதொரு முடிவினை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததாகவும் கிறிஸ்டி கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறரை ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்தமை ஒரு அற்புதமான பயணம் எனவும் இறுதி நாள் வரையில் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தனக்கு ஆதரவாகவே இருந்த போதிலும், தனது இந்த விலகல் மூலம், கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு சட்டமன்றில் சிறந்த எதிர்க்கட்சியாக திகழும் என்று நம்புவதாகவும் கிறிஸ்டி கிளார்க் மேலும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆட்சியில் இருந்துவந்த லிபரல் கட்சி, அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண தேர்தலில், புதிய சனநாயக கட்சி மற்றும் பசுமைக்கட்சிக் கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்