ஆகஸ்ட் 3ம் அரக்கத்தனமும்!!

இருபத்தேழு ஆண்டு முன்னால்
இதே போன்ற ஒரு நாளில்
இருளிலே வெடிச் சத்தம்
இஷாவின் பின் உலுக்கியது


புலி நாய்கள் பூந்து
புள்ளைகளையும் ஆட்களையும்
பலியாக்கிப் போட்டாண்டா
பாதையிலே அவலக் குரல்.

பக்கத்துப் பள்ளிக்கு
பறந்து வந்த செய்து கேட்டு
திக்கற்று ஓடினோம்
விக்கித்துப் போனோம்

அள்ளாஹ் அள்ளாஹ் என்று
அடங்கும் உயிரோடு
பிள்ளைகள் துடி துடிக்க..
உள்ளம் நொறுங்கியது

இருண்ட பள்ளிக்குள்
எங்கும் மரண ஓலம்
கரண்டிக் கால் நனைய
காட்டாறாய் ரத்தம்

காயப் பட்டோரை
கைகளால் தூக்கும் போதே
சாய்கின்ற தலை கண்டு
வாய் விட்டு அழுதோம்.

கலிமாவைச் சொல்லி
கண்களை மூடி விட்டோம்
புலி நாயைப் பிடித்து
பொசுக்க வெறி கொண்டோம்

நூற்றி சொச்சம் உறவுகளை
நொடியிலே இழந்த கவலை
ஆற்ற முடியாக் காயமாக
அடி மனதில் இருக்கு இன்னும்

வெறி பிடிச்சு சுட்டவன்கள்
வேரோடு அழிந்து போனான்.
இறைவனின் தண்டனைகள்
இறங்குதைத் தடுப்பது யார்?

இருபத்தேழு ஆண்டு முன்னால்
இதே போன்ற ஒரு நாளில்
உயிர் பிரிந்த அவர்களுக்கு
உயர் சுவர்க்கம் கிடைக்கட்டும்

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்