பிரித்தானிய முன்னாள் பிரதமரை விசாரிக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு

போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் உட்படுத்தப்படக் கூடாது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் தொடர்புடைய போர்க் குற்ற விசாரணைகளில் பிளேயர் உட்படுத்தப்படக் கூடாது என நேற்றைய தினம் குறித்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈராக்கின் முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி ஒருவரினால் டோனி பிளேயருக்கு எதிராக தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பில் பங்கேற்க வேண்டும் என டோனி பிளேயர் தீர்மானத்தை மேற்கொண்டார்.

அவரின் குறித்த தீர்மானம், அவரது 10 வருட அரசியல் வாழ்க்கைக்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன். சிக்கலைத் தோற்றுவித்து வருகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேசச் சட்டத்தை ஈராக் மீறிவருவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, அமெரிக்காவுடன் இணைந்து பிரி்த்தானியாவும் ஈராக் மீது படையெடுப்பை மேற்கொண்டது.

அத்துடன் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பெருமளவான ஆயுதங்கள் ஈராக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையை அடுதது தேடுதல் வேட்டைகளும் பிரித்தானிய படையினரால் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே ஈராக் முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி ஒருவரினால் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது போர்க் குற்ற பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்