வெனிசுவேலா மீதான பொருளாதார தடைகள் சரியானதல்ல: தொழிற்கட்சி உறுப்பினர்

வெனிசுவேலா ஜனாதிபதி சர்வாதிகாரி என்று கூறி அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்காவின் செயற்பாடுகள் சரியானவை அல்ல என பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெனிசுவேலா அரசாங்கத்திற்கும் எதிர்தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை எளிதாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘வெனிசுவேலாவில்  பாரிய நெருக்கடி நிலவுக்கின்ற நிலையில் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிப்பது சரியன்று. அமெரிக்காவின் இந்த தடைகளின் அடிப்படையில் அமெரிக்க நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் வெனிசுவேலாவில் வணிகத்தில் ஈடுபடுவது தடுக்கப்படுகின்றது.

எனவே வெனிசுவேலாவில் இடம்பெறும் போராட்டங்களை தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகளை எளிதாக்க முயற்சிக்க வேண்டும்.அதுவே சிறந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெனிசுவேலாவில் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ வெற்றிபெற்றிருந்த நிலையில் வெனிசுவேலா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அத்துடன், சர்வாதிகார முறையை வெனிசுவேலா பின்பற்றப் போகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரித்தானிய தொழிற்கட்சி சார்பில் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பினை வெனிசுவேலா அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டமை குறப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்