முன்னைய அணியை விட தற்போதைய இந்திய அணி சாதித்து வருகின்றது: ரவிசாஸ்திரி பெருமிதம்

இதற்கு முன் இருந்த இந்திய அணியை விட தற்போதைய விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, பெரிய அளவில் சாதித்து வருவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வலைபயிற்சியின் போது நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள் குறைந்தது 2 ஆண்டுகளாக ஒன்றாக விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்கள் இப்போது நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னைய இந்திய அணிகளில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தும் செய்ய முடியாததை தற்போதைய இந்திய அணி ஏற்கனவே சாதித்து காட்டி இருக்கிறது. உதாரணமாக சொல்லப்போனால் 2015ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியில் மிகப்பெரிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் பலமுறை இலங்கைக்கு சென்று விளையாடி உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஒருபோதும் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. தற்போதைய இந்திய அணி அதனை செய்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் முன்னையஇந்திய அணிகள் செய்யாததை ஏற்கனவே இந்த இந்திய அணி செய்ய தொடங்கி விட்டது.

விராட் கோஹ்லி இன்னமும் இளைஞர் தான். டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக அவரை நான் கேப்டனாக பார்த்ததற்கும், தற்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிலெய்;ட் டெஸ்ட் போட்டியில் அவர் அணித்தலைவராக செயற்பட்ட போது நான் அங்கு இருந்தேன். தற்போது 27 டெஸ்ட் போட்டிக்கு அணித்தலைவராக இருந்து இருக்கிறார். எனவே பெரிய வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம். களத்தில் அவர் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து எவ்வளவு முதிர்ச்சி அடைந்து இருக்கிறார் என்பது தெரியும். அவர் தொடர்ந்து முதிர்ச்சி பெறுவார். அவருடைய வயதுக்கு அவர் நிறைய பங்களிப்பை செய்து இருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரராக உருமாறுவதற்கான அறிகுறி தெரிகிறது.

தென்னாபிரிக்கா, இங்கிலாந்து என்று வெளிநாட்டு தொடர்கள் வருகின்றன. இவை மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் அவற்றை நான் ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த இந்திய அணி, மற்ற இந்திய அணிகள் செய்யாததை செய்து காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்