தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்ட மொன்றியல் ஒலிம்பிக் அரங்கம்

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்ட மொன்றியல் விளையாட்டு அரங்கம், சட்டவிரோதமாக அமெரிக்க- கனேடிய எல்லையை கடந்து கியூபெக்கிற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் முகமாக குறித்த அரங்கத்தில் சுமார் 150 குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடியேற்றவாசிகள் பலரும் பேருந்துகள் மூலம் அரங்கிற்கு நேற்று (புதன்கிழமை) அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதேவேளை, மக்களுக்கான மலசலகூட மற்றும் குளியலறை வசதிகள் என்பனவும் அங்கே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

குறித்த ஒலிம்பிக் அரங்கம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முகாமாக பயன்படுத்தப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்