நல்லூர்பாதுகாப்பு தரிப்பிடங்களில் அதிக கட்டணம் !

யாழ்ப்பாண மாநகர சபையால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை விடவும் நல்லூர் ஆலய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள வாகன பாதுகாப்பு நிலையங்களில், அதிகரித்த கட்டணங்களை அறவிடுவதாக மாநகர சபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் ஆலயத் திருவிழாவின் போது அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 ரூபாவும் , துவிச்சக்கர வண்டிகளுக்கு 5 ரூபாய் எனவும் மாநகர சபையினால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேல் கட்டணம் அறவிடக் கூடாது என யாழ்ப்பாணம் மாநகர சபையால் அறிவுறுத்தப்பட்டது.

எனினும் சில பாதுகாப்பு நிலையங்கள் சிலவற்றில் மோட்டார் சைக்கிள்களுக்கு 20 ரூபா கட்டனம் அறவிடுவதுடன் தலைக் கவசத்துக்கு என பிறிதாக 10 ரூபாய் கட்டணமும் தனித்து அறவிடப்படுவதாக மாநகர சபையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மாநகர சபையால் அனுமதிக்கப்பட்ட கட்டணம் 10 ரூபா மட்டுமே. அவ்வாறு அச்சிடப்பட்ட சிட்டைகளுக்கு மட்டுமே மாநகரசபையும் றப்பர் முத்திரை பொறித்து வழங்கியுள்ளது. இருப்பினும் சில பாதுகாப்பு நிலையங்களில் அனுமதியின்றி 20 ரூபா சிட்டைகள் அச்சிட்டு மாநகர சபை றப்பர் முத்திரை பொறிக்காது வழங்குவது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்