1 கோடியைக் கடந்த ‘சர்வைவா’

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தின் ‘சர்வைவா’ சிங்கிள் பாடல் லிரிக் விடீயோ ஜுன் மாதம் 20ம் தேதி யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னதாகவே சாவன் இணையதளத்திலும் வெளியானது.

ராப் பாடல் வகையில் இனிமையான இசையுடன் அமைந்த பாடல் ரசிகர்களை உடனடியாகக் கவர்ந்தது. அனிருத் அவருக்கென்று இருக்கும் தனி ஸ்டைலுடன் பாடலை உருவாக்கியிருந்தார். அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் தற்போது யு டியுபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சுமார் 50 நாட்களிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாடலுக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன.

அந்தப் பாடலுக்குப் பின் ‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை, காதலாட’ ஆகிய பாடல்கள் தனித் தனியாக வெளியிடப்பட்டாலும் முதலில் வெளியான ‘சர்வைவா’ பாடல்தான் தொடர்ந்து அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. ‘விவேகம்’ படத்தின் மற்ற பாடல்களும் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.

‘விவேகம்’ பாடல்களுக்கு ‘மெர்சல்’ படத்தின் ஒரு பாடலுடன் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இது இரண்டு படங்களின் இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோருக்கான போட்டியே அல்ல. விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கான போட்டியே. ‘மெர்சல்’ படத்தின் மற்ற பாடல்கள் வெளிவரும் வரை இந்தப் போட்டி தொடரும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்