தமிழரசுக் கட்சியுடன் ரெலோ அமைப்பு தனித்து பேச்சு

தமிழரசுக் கட்சியுடன் ரெலோ அமைப்பு தனித்து பேச்சு நடத்தி அரசியல் தீர்வு விடயத்தில் உடன்பதடு ஒன்றினை ஏற்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க ரெலோ தலைமைக்குழு விரும்புவதாக ரெலோ கட்சியின் செயலாளர் சிறிகந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று காலை முதல் நேற்று மாலை வரை இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு வழிசமைக்கும் முகமாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு ரெலோ தலைமைக்குழு கோரியுள்ளதாக தெரிவித்த அவர், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கொண்டு வர இருக்கின்ற 20 ஆவது திருத்தம் தொடர்பில் விவாதித்து கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிடம் வேண்டுகோள் விடுகின்றோம். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ சம்மந்தன் அவர்களுக்கு எங்களுடைய எழுத்து மூலமான வேண்டுகோள் அனுப்பப்பப்படுகிறது.
மேலும், அரசியலமைப்பு விவகாரங்கள் சம்மந்தமாகவும் எங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளை விடடுக் கொடுக்காமல், அடிப்படை கோரிக்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல், அதேநேரத்தில் இரண்டு பிரதான சிங்கள கட்சிகளும் கூட்டாக  அரசு அமைத்து அந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய அரசியல் சூழ்நிலை இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த அரசியல் தீர்வு முயற்சிகளை தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.  இது தொடர்பாக ஏற்கனவே ஒரு சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியினுடைய பெரும் தலைவருமான கௌரவ சம்மந்தன் அவர்களுடனும், அந்தக் கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா, அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுமந்திரன் அவர்களுடனும் நடத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கூட நாங்கள் முழுமையான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒரு குழு தமிழரசுக் கட்சியின் சார்பிலும், எங்களது கட்சியின் சார்பில் ஒரு குழுவும் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை முன்னெடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அரசியல் தீர்வு விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும் எனவும், அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அதில் பேசி அனைத்துப் பங்காளிக் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டில் குரல் எழுப்பக் கூடிய நிலை உருவாகும் எனவும் நாம் கருதுகின்றோம் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்