நாளை ‘வேலைக்காரன்’ டீசர் வெளியீடு

‘ரெமோ’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்கள். ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மோகன்ராஜா பல பெரிய ஹீரோக்கள் அழைத்தும் அவர்களை நாயகனாக வைத்து படத்தை இயக்காமல் சிவகார்த்திகேயன் அழைப்பை ஏற்று ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீப காலப் படங்களில் பெரிய ஹீரோயின்களுடன் மட்டுமே ஜோடி சேர வேண்டும் என்று நினைத்துள்ள சிவகார்த்திகேயன், நயன்தாராவை அவருடைய ஜோடியாக நடிக்க சம்மதிக்க வைத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு பொறாமைப்படவும் வைத்தது.

மலையாளத் திரையுலகின் முக்கிய நடிகரான பகத் பாசில் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். சில நாட்களுக்கு முன்பு பகத் பிறந்த நாளன்று வெளியான போஸ்டரில் பகத் பெயர் கூட இடம் பெறவில்லை. அதை டீசரில் சரி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜா தரமான ஒரு படத்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்