பொறுமை இழந்துவிட்டனர் தமிழர்! தலையிட வேண்டும் சர்வதேச சமூகம்!! – சம்பந்தன் அவசர கடிதம் 

“தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்துக்கு சாதகமான சமிக்ஞை அல்ல. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக்கொண்டிராமல் தலையீடு செய்யவேண்டும்.”
– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. பொதுச் செயலர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு அவசரமாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்குத் தான் எழுதிய கடிதங்களின் பிரதியையும் அந்தக் கடிதத்துடன் இணைத்து இரா.சம்பந்தன் அனுப்பிவைத்துள்ளார்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு கோரி 170 நாட்கள் வீதியிலிருந்து தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தக் காணி விடுவிப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேரடியாகப் பேச்ச நடத்தியிருந்தார். அதன் பின்பும் காணி விடுவிக்கப்படாததைத் தொடர்ந்து ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கடிதப் பரிமாற்றம் நடத்தியிருந்தார்.
கடந்த 11ஆம் திகதி ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் மிகக் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பில் கூட்டம் நடத்துமாறும், ஜனாதிபதியைச்  சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தார். இவற்றுக்கான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. உட்பட சர்வதேச  சமூகத்தின் தலையீட்டைக் கோரி இவ்வாறானதொரு நிலையில் கடிதம் அனுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்