வசீம் தாஜுதீன் படுகொலை: ஷிராந்தியை மூன்றரை மணி நேரம் துருவியது சி.ஐ.டி.! – இன்று மகன் யோசிதவிடமும் விசாரணை   

ரக்பி விளையாட்டு வீரர், வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் மூன்றரை மணிநேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கத்தால் சிரிலிய அமைப்புக்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனத்தில் நிறம் மாற்றியமைக்கப்பட்டது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே ஷிராந்திக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்திருந்தது.
குறித்த வாகனம், ஷிராந்தியின் பாதுகாப்பு அதிகாரிகளால்  வசீம் தாஜுதீனின் கொலைக்குப்  பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், கொலை இடம்பெற்ற பின்னர் திடீரென அது நிறமாற்றம் செய்யப்பட்டது என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியே வாக்குமூலம் பெறப்படவிருந்தது.
இது சம்பந்தமான விசாரணைகளுக்காக கடந்த 27ஆம், 28 ஆம் திகதிகளில் ஆஜராகுமாறு ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும், அவரது மகனான யோசித ராஜபக்ஷவுக்கும் சி.ஐ.டியினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் ஆஜராகவில்லை.
இந்நிலையிலேயே நேற்று முற்பகல் 9.45 மணியளவில் ஷிராந்தி சி.ஐ.டி. வளாகத்துக்கு வந்தார். உள்ளே சென்றது முதல் பிற்பகல் 1.15 மணிவரை அவரிடம் பலகோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் யோசித ராஜபக்ஷவிடம் இன்றைய தினம் சி.ஐ.டி. வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
2012ஆம் ஆண்டு வசீம் தாஜுதீனின் சடலம் நாரஹேன்பிட்டிய பகுதியில் காரொன்றிலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் அது விபத்து எனத் திட்டமிட்ட அடிப்படையில் மூடிமறைக்கப்பட்டது. தாஜுதீனின் மரணம் குறித்து மர்மம் நிலவியபோதும்  அது குறித்து பலகோணங்களில் தகவல்கள் வெளியானபோதும் முன்னாள் அரசு (மஹிந்த அரசு) கண்டுகொள்ளவில்லை.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகின. அது விபத்தல்ல என்றும், படுகொலை என்றும் உறுதியானது. அத்துடன், மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.
அத்துடன், நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரியும் கைதுசெய்யப்பட்டார். அது தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. எனினும், தாஜுதீன் படுகொலையுடன் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் தொடர்புபட்டுள்ளது என ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்