புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் 24ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் 24ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
மறுசீரமைக்கப்பட்ட புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி சபைகள்  மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்,  தேசிய அரசின் பங்காளிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு அப்போதைய பொருளாதார அமைச்சராக இருந்த பஸில் ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் பாரிய சிக்கல் நிறைந்ததாகவும், சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும் வகையில் அது அமைந்தமையாலும் அதற்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டுவந்தது.
தற்போதைய அரசின் கீழ் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணயக் குழு ஒருவருட காலத்துக்கு மேல் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் துறைசார் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எல்லை நிர்ணய அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.
அதனடிப்படையில் பல்வேறு இழுபறிக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டுவந்த சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தச் சட்டமூலத்தின் பிரகாரம் 60 வீதம் தொகுதிவாரி முறையிலும்,  40 வீதம் விகிதாசார முறையிலும்  தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், பெண்களுக்கு 25 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு சிவில் அமைப்புகளும் பொது எதிரணியான மஹிந்த அணி உள்ளிட்ட சில அமைப்புகளும் கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் சட்டமூலத்தை நிறைவேற்றி உடனடியாகத் தேர்தலுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்