சர்வதேச தலையீட்டுக்கு ஒருபோதும் அனுமதியேன்! – கடமைகளைப் பொறுப்பேற்ற கையோடு மாரப்பன இறுமாப்பு 

சர்வதேச தலையீட்டுக்கு ஒருபோதும் அனுமதியேன்! – கடமைகளைப் பொறுப்பேற்ற கையோடு மாரப்பன இறுமாப்பு (photo)
“இலங்கையின் நீதித்துறையில் சர்வதேச தலையீட்டுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது. அரசமைப்பில் அதற்கான சந்தர்ப்பம் இல்லை. இதனை சர்வதேச சமூகத்திடம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.”
– இவ்வாறு தெரிவித்தார் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன.
வெளிவிவகார அமைச்சில் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி, சொகுசு வீடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கியுள்ள ரவி கருணாநாயக்க கடந்த 10ஆம் திகதி தனது வெளிவிவகார அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன  கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்.
நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கருத்து வெளியிடும்போது,
“எமது நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் எந்தவொரு வழக்கிலும் சர்வதேச விசாரணையாளர்கள் பங்கேற்கமுடியாது. இதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். சர்வதேசத்திடமும் இதனை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். சர்வதேச சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
சர்வதேச வழக்குத் தொடுநர்கள் மூலம் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கவேண்டும் என்று எனக்குத் தெரிந்தளவில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசம் குறிப்பிடவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் இலங்கை தொடர்பில் முன்வைத்த பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை. நாட்டில் மனித உரிமைகளைப்  பாதுகாப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.
வெளிவிவகார அமைச்சுப் பதவி  எனக்குக் கிடைத்த பின்புலம் பற்றி நான் கவலையடைகின்றேன். எதிர்பாராதவிதமாக கிடைத்த வெளிவிவகார அமைச்சுப் பதவி மூலம் நாட்டுக்குப் பொறுப்புணர்வுடன் கடமையாற்றவுள்ளேன்.
இலங்கையின் நிலைப்பாடு மற்றும் உண்மைத்தன்மையை உலகுக்கு எடுத்துரைப்பதுடன், வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஏற்றவகையில் நாட்டை மாற்றியமைக்கும் வகையில் செயற்படவுள்ளேன்.
வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளைப் பெற்று நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வலுப்படுத்த எதிர்ப்பார்ப்பதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் எதிர்பார்த்துள்ளேன்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களில் காணப்படும் பௌதீக மற்றும் மனிதவளக் குறைபாடுகளை நிவர்த்திசெய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்” – என்றார்.
…………………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்