வரட்சி நிவாரணம் வழங்கவில்லை என கேட்ட மக்களுடன் அநாகரிகமாக நடந்த கிராம அலுவலர்: மக்கள் ஆர்ப்பாட்டம்.

வவுனியாவில் வரட்சி நிவாரணம் வழங்கவில்லை என கேட்ட மக்களுடன் அநாகரிகமாக நடந்த கிராம அலுவலர்: மக்கள் ஆர்ப்பாட்டம்
தமக்கு வரட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள் கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்க சென்ற போது அவர்களை அநாகரிகமாக பேசி கிராம அலுவலர் விரட்டியமையால் அம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் வெறும் நூற்றுக்கும் குறைவான குடும்பங்களுக்கே வரட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்களை நிவாரண வேலைக்காக கிராம அலுவலர் அழைத்திருந்திருந்தார். வரட்சி நிவாரணத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தம்மை ஏன் புறக்கணித்ததாகவும், தாமும் அப்பகுதியில் தானே வசிக்கின்றோம் எனவும், தமக்கும் வரட்சி தானே என கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு சென்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அப்பகுதி கிராம அலுவலர் கி.கஜந்தன், அம்மக்களை பார்த்து தாம் பெயர் விபரங்களை பதிவு செய்யும் போது எங்கு இருந்தீர்கள், வீட்டில் படுத்தா இருந்தீர்கள், எங்கேயாவது படுத்திட்டு இங்கு வந்து கேள்வி கேட்டக்க் கூடாது என வயது வேறுபாடின்றி பலரையும் மிகவும் அவதூறாக தம்மை பேசி அனுப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டமையால் பூவரசன்குளம் பொலிசாரை அழைத்து மக்களை தனது அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த கிராம அலுவலர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்,
வரட்சி நிவாரணம் எமக்கும் வேண்டும், வரட்சி நிவாரணம் எவ்வாறு பதியப்பட்டது, அரசே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே, கிராம அலுவலரை இடம்மாற்றுக்கள், அநாகரிகமாக பேசும் கிராம அலுவலர் வேண்டாம், அதிகாரிகளே அநாகரிகமாக நடக்கலாமா என கோசம் எழுப்பியதுடன் தமக்கும் வரட்சி நிவாரணம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்