அர்த்தமுள்ள புது வாழ்க்கைப் பயணத்தை தொடரும் கௌசல்யாவின் முயற்சி!

ஆணவப் படுகொலையால் தன் வாழ்க்கையை இழந்த கௌசல்யா, இப்போது புது வாழ்வைப் பெற்று அர்த்தமுள்ள பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரின் சமீபத்திய முயற்சி, ‘சங்கர் தனிப்பயிற்சி மையம்’.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கெளசல்யாவும் சங்கரும் காதலித்தனர். சங்கர் அட்டவணைப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலை கௌளசல்யாவின் பெற்றோர் எதிர்த்தனர்.

அதையும் மீறி திருமணம் செய்து கொண்டு, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் தொடங்கிய இந்த ஜோடியை சாதி அரக்கன் விடவில்லை.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி நடுவீதியில் வைத்து சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கெளசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

மக்கள் பலரும் சூழ்ந்திருக்க நடந்த இந்தப் படுகொலை, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கெளசல்யா உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

சங்கர் தனிப்பயிற்சி மையம்கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த கௌசல்யா, தன் கணவரை பலி வாங்கிய சாதிக்கு எதிரான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.

கெளசல்யா தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள பல இளம் ஜோடிகள் ஆர்வம் கொண்டனர். முற்போக்கு கருத்து கொண்டோர், கெளசல்யாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று அரவணைத்தார்கள்.

இந்த இணைந்த கைகள் தரும் பலத்தால், துணிவோடு களத்தில் நிற்கும் கெளசல்யா, பொதுவெளியில் சாதிக்கு எதிரான தனது கருத்துகளைப் பதிவு செய்து, பலருக்கும் ஊக்க சக்தியாக இருக்கிறார்.

நான் தற்கொலை எண்ணத்தில் இருந்த நாள்களும் உண்டு. அதையெல்லாம் கடந்து வந்து இன்னைக்கு தன்னம்பிக்கையோட வாழ பலருக்கும் வழிகாட்டியா இருக்கிறது மனசுக்கு நிறைவா இருக்கு.

சாதி ஒழிப்புப் போராளி’ என்பதை என் அடையாளமா நினைக்கிறேன். அந்தப் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறேன். அதன் ஓர் அங்கமாதான், என் கணவரோட பெயர்ல ‘சங்கர் தனிப்பயிற்சி மையம்’ என்ற பயிற்சிப் பள்ளியைத் திறந்திருக்கேன்.

என் கணவரோட சொந்த ஊரான கொமரலிங்கம் என்கிற கிராமத்தில் இப்பயிற்சி மையத்தை நிறுவியிருக்கேன். இனிமே அந்த ஊரில் இருந்து சங்கர்கள் இழக்கிறதுக்கு இல்ல, எழுறதுக்கு கிளம்பி வரணும்.

நான் ஒரு ஊர்க்கார பெண்ணாதான் வளர்ந்தேன். பெரியார், அம்பேத்கரோட அரசியல், அவங்களோட கொள்கைகள் எல்லாம் சங்கரை இழந்ததுக்கு அப்புறம்தான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். சாதி அரசியல் பற்றின விஷயங்களை ஒவ்வொண்ணா கத்துக்க ஆரம்பிச்சேன்.

பறை மூலமா என்னோட வலி அனைத்தையும் கடந்து வர முடியும்னு உணர்ந்தேன். சாதிதான் முக்கியம்னு நினைக்குறவங்களுக்கு எதிரா என்னோட பறை ஒலிக்க ஆரம்பிச்சது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்