காணாமல்போனோர் பிரச்சினைக்கு மனிதாபிமான ரீதியில் தீர்வு: ஜனாதிபதி

காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையில் குறுகிய காலத்திற்குள் மனிதாபிமான ரீதியில் தீர்வைக்காண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி உறுதியளித்துள்ளார்.

இதன்போது, காணாமல் போனோர் பிரச்சினைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் குறுகிய காலத்தில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அவர்கள் எங்கேனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆதாரம் இருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். தேவை ஏற்படில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிட உத்தரவிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கில் மாவட்டம் தோறும் நான்கு பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்