மியன்மார் இனப்படுகொலைக்கு முடிவுகட்ட கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகளை கண்டித்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. டவுனிங் வீதி  10 ஆம் இலக்க இல்லத்திற்கு வெளிப்புறமாக நேற்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைத்து நடத்திய இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது, சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான மியன்மார் அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு முடிவுகட்டுவதற்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உதவிபுரிய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரித்தானியா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதுடன் சர்வதேச தீர்வுக்காக மியன்மாருடனான வரலாற்று ரீதியிலான உறவுகளை பயன்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மியன்மாரின் மேற்கு கிராமமான ராகினிலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை வெளியேற்றுவதற்காக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் அவ்வப்போது இத்தகைய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுவந்த போதிலும் கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளும் மியன்மாரில் மறுக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க வன்முறைகளிலிருந்து தப்பிச் செல்லும் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பங்களாதேஷில் தஞ்சம்புகுந்துள்ளனர். பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் உயிர்களை கையில் பிடித்தவாறு தப்பிச்செல்ல முயலும் அப்பாவி மக்கள்; மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையும் கடப்பதற்கும் முயற்சிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்