ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சட்டமூலம் தொடர்பில் விவாதம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் உறுப்புரிமையை முடிவுக்கு கொண்டுவரும் சட்டமூலம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்துள்ளனர். பிரித்தானியாவின் பிரெக்சிற் திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்சிற் பேச்சுவார்த்தையாளர் சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில் மேற்படி விவாதம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த விவாத்தின் போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரபி கோர்பின் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒழுங்கான முறையில் வெளியேறுவதை உறுதிப்படுத்துவதற்கு சட்டம் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சட்டம் இல்லாமல் மென்மையான முறையிலும் ஒழுங்கான முறையிலும் வெளியேறுவது என்பது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பிரித்தானியாவின் சட்டமூலமானது 1972 ஐரோப்பிய சமூக சட்டத்தை திரும்பப்பெறும் வகையிலும் ஐரோப்பிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமறைகளை நேரடியாக மாற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய சட்டமானது 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவை சிதைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாக தெரேசா மே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறிருக்க பிரெக்சிற்றுக்கு ஆதரவளிப்பதாக கூறும் தொழில்கட்சி சட்டவரைபுக்கு எதிராக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்