90களில் ஊர் போகும் போது

90களில் ஊர் போகும் போது
+++++++++++++++++++++++
Mohamed Nizous

ஒன்பது மணிக்கு
ஊர் போகும் பஸ்ஸில்
சம்மாங்கோட்டை அருகில்
சனங்கள் ஏறும்.

பத்து மணிக்குப்
பயணம் தொடங்கும்
கதுருவலை அடைய
காலை மூணாகும்
பள்ளியின் முன்னால்
பஸ்கள் நிற்கும்.

உள்ளே பள்ளியில்
உறங்குவதைக் தடுக்க
கேற்றைச் சாத்தி
பூட்டுத் தொங்கும்

இருட்டில் நடந்து
வயலைத் தாண்டி
பள்ளியின் பின் பக்க
முள்ளுக் கம்பியால்
உள்ளே புகுந்து
ஒது எடுக்கும் பகுதியால்
ஏறிப் பாய்ந்து
இருக்கின்ற விறாந்தையில்
ஒரு மணி நேரம்
உறக்கம் போகும்.

பாங்கு சொல்ல
பரபரவென எழுந்து
பக்கத்து கிணற்றில்
பல்லை விளக்கி
ஒளூச் செய்து
உடனே தொழுது
மன்னம் பிட்டி நோக்கி
மறுபடி பயணம்.

வீதியைத் திறந்து
விடுகின்ற வரைக்கும்
மன்னம் பிட்டியில்
பென்னம் பெரிய க்யூ.

அப்பவே திறக்கலாம்
அப்புறமும் திறக்கலாம்
காத்துக் கிடந்தே
தோத்துப் போவோம்.

அப்புறம் இருக்கிற
அத்தனை பொயிண்டிலும்
ஏறி இறங்கியே
இடுப்பு உடையும்.

வெலிகந்தை பொயிண்டில்
வெய்யிலில் மீண்டும்
பார்த்துக் கிடக்கனும்
பாதை திறக்கும் வரை

நாலு மணி வரைக்கும்
நாக்குக் காய
காத்த நாட்களும்
கதையில் உண்டு.

கிளைமோர் தாக்குமோ
கிரனைட் வெடிக்குமோ
கண்ணி வெடி கிளம்பி
கணக்கை முடிக்குமோ
எல்லோர் கண்ணிலும்
ஏதோ ஓர் பயம்.

ஒரு நாள் இரவு
ஒன்பதுக்குத் தொடங்கி
மறு நாள் இரவு
மாலை பிந்தியபின்
ஊர் போன செய்தியும்
உள்ளுக்குள் இருக்கு.

கண்டதும் வீட்டில்
கண்ணீர் சிந்த
உன்னையும் கடத்தியதாய்
சொன்னாங்க மகன் என்று
எல்லோரும் அழுததும்
இன்னும் மறக்கல்ல

ஊர் போகும் பெரிய
உயர பஸ்ஸுக்குள்
ஆறுதலாய் சாய்ந்து
அனுபவித்துப் போகையில்
பழைய நினைவுகள்
பனியாய் கொட்ட
எழுதிய வரிகள்
இத்துடன் முடிக்கிறேன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்