கனடியத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் யுத்தத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுக்கு நிதிசேர் நடை

 

செப்டெம்பர் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவின் தொம்சன் பூங்காவில் (Thomson Memorial Park – Brimley/Lawrence) காலை 8:30 மணிக்கு கனடியத் தமிழர் பேரவையின் 8வது வருடாந்த நிதிசேர் நடை நடைபெறவுள்ளது. இந்த நிதிசேர் நடையானது யுத்தத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தென்னமரவடி கிராமத்து மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் நோக்கோடும் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் வலுத் தர வைக்கும் இலக்கோடும் நடத்தப்படுகிறது.

கனடியத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் நடக்கும் இந்த நிதிசேர் நடையின்போது பல்வேறு அமைப்புக்கள் இணைந்து தென்னமரவடி மக்களின் மறுவாழ்வுத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர். இந்த நிதிசேர் நடைமூலம் திரட்டப்படும் பணம் முழுமையும் கால்நடை வளர்ப்பு, தென்னைப் பயிர்ச்செய்கை, ஊடு பயிர்ச்செய்கை ஆகியன ஒன்றிணைந்த பண்ணை ஓன்றை $100,000 கனடியன் செலவில் அமைப்பதற்குத் திட்டமிடபட்டுள்ளது. இந்தப் பண்ணையில் அங்கு வாழும் பத்து குடும்பங்கள்உடனடியாகக் குடியமர்த்தப்பட்டு வேலை வாய்ப்பைப் பெறுவர். தொடர்ச்சியாக அனைத்துத் தென்னமரவடி மக்களும் பொருளாதார அடிப்படையிலான நன்மைகளையும் பெறுவர். இந்தத் திட்டம் வெற்றியடையும்போது இறால் வளர்ப்பு , மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கான பல்வேறு முதலீடுகள் தென்னமரவடி நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தென்னமரவடி கிராமம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சந்திக்கும் கேந்திர முக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்து உள்ளது. இந்தத் தென்னமரவடியானது தொன்மையான வரலாறு படைத்த ஊருமாகும். இவ்வூர் ‘தென்னன் மரபு அடி’, அதாவது பாண்டியனின் மரபில் வந்தவர்கள் என்ற காரணப்பெயரைக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வூரில் 1625 உறுப்பினர் கொண்ட 242 குடும்பங்கள் வளமாக வாழ்ந்து வந்தன. 1984 ஆம் ஆண்டில் ஓர் இரவில் இவ்வூர் முழுமையாக எரியூட்டி அழிக்கப்பட்டது. பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் உயிர்ப் பாதுகாப்புக்கருதி அயலில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் தப்பி ஓடி அங்கு இடம்பெயர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 2009 போர் இடம்பெற்றது. அதில் சிக்கி மேலும் பலர் இறந்து போயினர். ஏறத்தாள சுமார் கால் நூற்றாண்டு காலம் இவ்வூர் மக்கள் தமது சொந்த ஊருக்குள் திரும்பி வர முடியாத அசாதாரண சூழல் நிலவியது. மிக அண்மைக் காலத்தில்தான் தென்னமரவடி மக்கள் திரும்பி வரக்கூடியதொரு சூழல் உருவாக்கி உள்ளது. இதுவரை 230 உறுப்பினரைக் கொண்ட 82 குடும்பங்கள் திரும்பி வந்துள்ளன. 279 குடும்பங்கள் இன்னும் வரவேண்டி உள்ளது.

தென்னமரவடிக்கு திரும்பி வந்து குடியேறியோர் பல்வேறு சிக்கல்களோடு வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். வாழ்வதற்கு ஒழுங்கான வீட்டு வசதி இல்லை, மருத்துவ வசதியில்லை, போக்குவரத்து வசதி இல்லை, தொழில் வாய்ப்பு இல்லை, யானைத் தொல்லை எனப் பல்வேறு சிக்கல்களோடு அவர்கள் தம் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை சீராகுமிடத்து மட்டுமே வெளியிடங்களில் வாழும் மற்றவர்கள் தாங்களும் திரும்பி வருவது சாத்தியம் எனக் கூறி வருகின்றனர். இதுவரை 28 குடும்பங்களுக்கு மட்டும்தான் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியோருக்கும் வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து, தென்னமரவடியின் மறு பிறப்பிற்கு ஒரு வாய்ப்புத் தேடும் முயற்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் நிதிசேர் நடை மூலம் உருவாகவிருக்கும் பண்ணைத்திட்டத்தை தென்னமராவடிக் கிராம அபிவிருத்திச் சங்கம் செயற்படுத்தும். NEEDS என்றழைக்கப்படும் வடகிழக்கு அபிவிருத்தி நடுவம் இத்திட்டச் செயலாக்கத்தைக் கண்காணிக்கும். திருகோணமலை நலன்புரிச் சங்கமும் உதவும். இந்த நிதிசேர் நடையில் இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களும், வடக்கு மாகாணசபை கவுன்சிலரான இம்மானுவேல் ஆர்னோல்ட் அவர்களும் கலந்து கொள்வார்கள்.

“இந்த நிதி சேர் நடையில் கலந்து கொள்வதன் மூலம் – எங்களால் முடிந்த நிதி உதவியும் வழங்கி – தென்னமரவடி என்ற நம் தொன்மையான ஊரைக் காப்பாற்ற எமக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஒரு இனத்தின் வெற்றிகரமான முழுமையான வளர்ச்சியானது, அதன் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் தங்கியுள்ளது. அதற்கானதொரு முதற்படியே இந்தப் பண்ணைத் திட்டமாகும். ஆகவே இணைவோம் உதவிடுவோம்!!” என கனடியத் தமிழர் பேரவை அனைவரையும் அழைக்கிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்