படு கொலைகள் விவகாரம்! – புதிய சிக்கலில் கோட்டாபய

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012 நவம்பர் 11 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே இது தொடர்பில், கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, வெலிக்கடையில் இடம் பெற்ற படுகொலைகளுக்கும், ஜகத் ஜயசூரியவிற்கும் நேரடி தொடர்புகள் உண்டு என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளரான சுரேஸ் நந்திமாலின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்