இருபதாவது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகம் என்ற குறுட்டு விமர்சனமும், மஹிந்தவுக்கு விழுந்த அடியும்.

இருபதாவது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகம் என்ற குறுட்டு விமர்சனமும், மஹிந்தவுக்கு விழுந்த
அடியும்.

எமது கரையோர பிரதேசத்தில் சுனாமியின் பிற்பாடு சுனாமி வருகின்றது என்ற வதந்தியினால் மக்கள் அடிக்கடி ஓட்டம் எடுத்தார்கள். ஓடியவர்களிடம் ஏன் ஓடுகின்றாய் என்று கேட்டால் அவரும் ஓடினார். அதனால் நானும் ஓடினேன்என்றார்கள்.

அதுபோலவே இருபதாவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியதற்கான விமர்சனமாகும். விமர்சிப்பவர்களுக்கு இருபதாவது திருத்தச்சட்டம் என்றால் என்ன என்ற போதிய அறிவின்மையினால் குற்றம் சுமத்துகின்றார்கள்.

இத்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள பாதகம் என்ன என்று கேட்டால், அவரும் விமர்சிக்கின்றார், அதனால் நானும் விமர்சிக்கின்றேன் என்று கூறுகின்றார்களே தவிர, இதில் முஸ்லிம்களுக்கு எந்தவகையான பாதகம் உள்ளது என்ற கேள்விக்கு இவர்களிடம் தெளிவான பதிலில்லை. ஒரே தடவையில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபை தேர்தல்களையும் நடாத்த வேண்டும் என்பதுதான் இந்த இருபதாவது திருத்தச்சட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரேதடவையில் நடத்தாமல், ஒவ்வொரு மாகானசபை தேர்தலையும் வெவ்வேறு காலகட்டத்தில் நடாத்தி வெற்றிவிழா கொண்டாடினார். அதாவது ஒரு மாகானசபை தேர்தலை நடாத்துவதற்காக நாட்டிலுள்ள தங்களது அனைத்து ஆதரவாளர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்று திரட்டி, தேர்தலை நடாத்தி வெற்றிபெற வைப்பதன் மூலம் தன்னை அசைக்க முடியாத
வெற்றியாளராக காட்டிக்கொண்டார்.

இதனால் நாட்டின் ஏனய பிரதேசங்களில் ஐ.தே.கட்சி ஒரு வெற்றிபெற முடியாத கட்சியாக மக்கள் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்த நிலையினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்கான ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான் இந்த இருபதாவது திருத்தச்சட்டமாகும். ஏனெனில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காணும்பொருட்டு, புதிய அரசியலமைப்புக்கான அல்லது இருபத்தியோராவது திருத்தத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இருபதாவது திருத்தச் சட்டத்தின் முந்திய சரத்தில் மாகாணசபைகளை கலைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கடுமையாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பின் காரணமாகவே மீண்டும் இதன் சரத்துக்கள் திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின்புதான் கிழக்குமாகான சபையில் முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவளிக்க முன்வந்ததே தவிர, கண்ணை மூடிக்கொண்டு
ஆதரவளிக்கவில்லை.

இதில் நாங்கள் ஒரு விடயத்தினை கவனிக்க வேண்டும், அதாவது தனிநாட்டு கோரிக்கைக்கு சமனான கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே இருபதாவது திருத்தத்துக்கு ஆதாரவளிக்க முன்வந்திருப்பதானது, இந்த சட்டத்திருத்தத்தினால் சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதனை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த திருத்தத்தினால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசினதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஆட்சி
நீடிக்கப்பட உள்ளது.

தற்போதைக்கு எந்தவொரு தேர்தலையும் நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இந்நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி கலைகின்றது. அதன் பின்பு கிழக்கு மாகாணத்தின் முழுமையான ஆட்சி அதிகாரத்தினை ஆளுநரிடம் வழங்க ஏற்பாடாகி இருந்தது. இதனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எந்தவித மாகான அதிகாரமும் இல்லாத சூழ்நிலை எதிர்காலங்களில் உருவாக இருந்தது. இதனையே சில முஸ்லிம் புல்லுருவிகள் எதிர்பார்த்திருந்தார்கள்.
இந்தநிலை இன்று தடுக்கப்பட்டுள்ளது.

எனவே இருபதாவது திருத்தச்சட்டமானது மஹிந்த அணியினருக்கும், அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளிக்கின்றவர்களுக்கும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளதே தவிர, முஸ்லிம்களுக்கோ, தமிழர்களுக்கோ எந்தவிதபாதகமுமில்லை என்பதே தெளிவான உண்மையாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்