ரோபோ சிகிச்சை மூலம் 4 வயது சிறுவனின் கட்டி வெற்றிகரமாக அகற்றம்

வங்கதேசத் தம்பதியின் 4 வயது மகனின் நாக்கில் இருந்த கட்டி, ரோபா சிகிச்சை மூலம் சென்னையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் திலிப் தேவ்நாத். அவரின் 4 வயது மகன் ஷோனுக்கு நாக்கில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏராளமான மருத்துவர்கள் ஷோனுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் கட்டி தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவர்கள் வந்தனர்.

இதுகுறித்துப் பேசிய மருத்துவமனையின் ஆலோசகரான வெங்கடகார்த்திகேயன், ”எங்கள் மருத்துவர்கள் ஷோனை நன்கு பரிசோதித்தனர்.

சிறுவனின் நாக்கில் 4 செ.மீ. நீளத்துக்கு கட்டி வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீளம் மேலும் அதிகமானால் சுவாசம் தடைபடும் ஆபத்தும் அதிகம் இருந்தது.

வழக்கமான மைக்ரோஸ்கோப்பிக் / எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை அல்லது ரோபோ சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது குறித்து பெற்றோர்களிடம் கலந்து ஆலோசித்தோம். அவர்கள் ரோபோ சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தனர்.

ரோபா சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய இடம் 10 மடங்கு பெரிதாக ஆக்கப்பட்டது. இதன்மூலம் அறுவை சிகிச்சை நிபுணர் 3டி முறையில் தெளிவான காட்சியோடு சிகிச்சையைத் தொடங்கினார். ரோபா அறுவை சிகிச்சைக் கருவிகளின் லாவகத்தால், அறுவை சிகிச்சை மருத்துவரால் கட்டியைத் துல்லியமாக அகற்ற முடிந்தது.

சிகிச்சை முடிந்த மறு நாளே, ஷோன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்” என்றார்.

தற்போது ஷோன் நன்றாக உணவு உட்கொள்ள முடிவதாகவும், விரைவில் அவர்கள் வங்க தேசம் திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்