இனவாத சக்திகளின் இடையூறு: ஐ.நா.வில் முறைப்பாடு!

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இனவாத சக்திகளின் இடையூறுகள் என்பன குறித்து ஐ.நா. ஆணையாளருக்கு ஜனாதிபதி மைத்திரி எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. பொதுச் சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா. செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இந்திய பிரதமர், ஜப்பான் பிரதமர், சீன ஜனாதிபதி மற்றும் ஜேர்மன் அதிபர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

குறிப்பாக இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில், ஐ.நா. ஆணையாளருடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்குறித்த விடயங்களை தெரிவிப்பாரென கூறப்படுகிறது.

அத்தோடு, காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நிறுவும் செயற்பாடு, புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்பன தொடர்பாகவும் விளக்கமளிக்கவுள்ளார்.

இதேவேளை, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரி சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்