சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் யாழில் இன்று போராட்டம்

யாழ். மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய வேளையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இலங்கையின் சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் யாழில் இன்றைய தினம் ஒன்று திரண்டு பெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணியாற்றியவேளையில் சுகாதார அமைச்சின் ஊடாக இடமாற்றம் வழங்கப்பட்டதனைக் கண்டித்து தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஐவருக்கும் தொடர்ந்தும் மாநகரசபையிலேயே பணியாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 500ற்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் பங்குபற்றும் நோக்கில் குடாநாட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் நியமனம் வழங்கப்பட்டு உள்ளூராட்சித் திணைக்களங்களில் பணிக்கமர்த்தப்பட்ட பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களில் ஒரே சபையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களிற்கு கடந்த ஆண்டின் இறுதியில் 2017 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்த்து.

இருப்பினும் உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சுகாதார உத்தியோகத்தர்களை சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்ய முடியாது என உத்தியோகத்தர்களும் நியமனம் வழங்கியதே சுகாதார அமைச்சு என எரிதரப்பிற்கும் இடையில் நீண்ட சர்ச்சை நிலவியதோடு குறித்த விடயம் நீதிமன்றமும் சென்றது. இவ்வாறான நிலையில் கடந்த 4 மாதங்களாக 5 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் பணிக்குச் செல்லாத நிலமையே காணப்பட்டது.

இதனால் கடந்த மாதம் இறுதிப் பகுதியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களைச் சந்தித்த வட மாகாண முதலமைச்சரும் முதலில் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் கடமையை பொறுப்பேற்று அதன் பின்னர் உங்கள் பிரச்சனையை எழுத்தில் தெரிவியுங்கள் அது தொடர்பில் ஆராயப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதற்கும் குறித்த 5 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களும் பணிக்குச் செல்லவில்லை.

இதன் காரணமாக 3 தினங்களிற்கு மேலாக பணிக்குச் செல்லாத ஊழியர்கள் தாமாக பணிவிலகியதாக கருதப்படக் கூடிய சூழலில் கடந்த 4 மாதமாக இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பணியை பொறுப்பேற்காத காரணத்தினால் சுயமாக பணியில் இருந்து விலகியதாக கருதப்படுகின்றீர்கள் என வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 4ம் திகதி எழுத்தில் கடிதம் அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்