ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் – மைக்கேல் கிளார்க் சொல்கிறார்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலியே தற்போது சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த, இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசுகையில் கூறியதாவது:-

விராட் கோலி (இந்தியா), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோரில் சிறந்த வீரர் யார்? திறமையான கேப்டன் யார்? என்பதை ஒப்பிட்டு சொல்லும்படி கேட்கிறீர்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று கருதுகிறேன். அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித் முந்துகிறார்.

இன்னும் சில தினங்களில் விராட் கோலியா, ஸ்டீவன் சுமித்தா யாருடைய கை ஓங்கும் என்று ஒவ்வொருவரும் பேசத் தொடங்கி விடுவார்கள். இருவரில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. இறுதியில் யார் அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய கேப்டனாக இருக்கிறார் என்பதே முக்கியமாகும்.

கேப்டன்ஷிப்பை எடுத்துக் கொண்டால், இருவருமே தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏறக்குறைய ஒரே மாதிரியான நிலையில் இருக்கிறார்கள். இருவரும் இளம் கேப்டன்கள். தரமான ஆட்டக்காரர்கள். தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். ஏற்கனவே நான் சொன்னது போல், ஒரு கேப்டனாக அணியை வெற்றி பெற வைப்பதே முக்கியம். தற்போதைக்கு, விராட் கோலியின் அணி வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே ஸ்டீவன் சுமித் இந்த தொடரில் தொடக்கத்திலேயே தங்களது அணியின் உத்வேகத்தை தூக்கி நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவின் ஆட்டம் சீரற்றதாக இருக்கிறது. தங்கள் அணி உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ வேண்டும் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணியால் வெல்ல முடிந்தால் அதுவும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால், ஒரு நாள் போட்டி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை அடைய முடியும். அதற்குரிய அருமையான வாய்ப்பு ஸ்டீவன் சுமித்துக்கு உருவாகியுள்ளது.

பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய மண்ணில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்களுக்கு இது 2-வது தாய்நாடு மாதிரி. இங்குள்ள சீதோஷ்ண நிலை நன்கு தெரியும். எனவே ஐ.பி.எல். அனுபவம் நிச்சயம் எங்களது வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்