உலக லெவன் அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிசிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய பகர் சமான் 4-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 33 பந்தில் அரைசதம் அடித்தார். 11.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.

அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். பாபர் ஆசம் 86 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

சோயிப் மாலிக் 20 பந்தில் 38 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, இமாத் வாசிம் கடைசி 3 பந்தில் 14 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. பெரேரா கடைசி ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். பாகிஸ்தான் கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 18 ரன்களில் ராயீஸ் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 26 ரன்களில் ராயீஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து டிம் பெயின் மற்றும் கேப்டன் டூபிலஸிஸ் ஜோடி சேர்ந்தனர். டூபிலஸிஸ் 29 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து டிம் பெயினும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் உலக லெவன் அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 9 ரன்களில் ஆட்டமிளந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின்னர் கிரண்ட் ஏலியாட் 14 ரன்களிலும், திசாரா பெரேரா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி ஏழு விக்கெட்களை இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டேரன் சம்மி 16 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 86 ரன்கள் எடுத்த பாபர் ஆசம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அடுத்த போட்டி நாளையும், கடைசி போட்டி 15-ம் தேதியும் நடைபெற உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்