அமெரிக்கா பெரிய வலியை சந்திக்க நேரிடும்: ஐ.நா தடைகளை நிராகரித்த வடகொரியா அறிக்கை

அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக ஐ.நா சபை சில தடைகளை விதித்துள்ள நிலையில், எந்த தடையையும் ஏற்கப்போவதில்லை என்றும் அமெரிக்கா பெரிய வலியை சந்திக்க நேரிடும் என வடகொரியா தெரிவித்துள்ளது.

பியான்யங்:
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த வாரம் சக்திவாய்ந்த அணு குண்டுகளை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாக செய்திகள் வெளியானது. இந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது.
இந்த சோதனைகள் அமெரிக்காவை மீண்டும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால், வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்தது.
அதில், வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஒருமனதாக பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. ஏற்கனவே, பலமுறை வடகொரியாவுக்கு எதிராக பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஐ.நா.வின் தடைகளுக்கு பதிலளித்துள்ள வடகொரிய தூதர் ஹான் டே சாங், “சமீபத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சட்டவிரோதமானது. இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெட்ரோலியப் பொருட்களுக்கு தடை மற்றும் கிம் ஜாங் உன் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இடம் பெற்ற அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறினால் அதற்காக அமெரிக்கா பெரும் வலியை சந்திக்க நேரிடும் என வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்