சோதனைக் குழாய் மூலம் 62 வயதில் குழந்தை பெற்ற ஆசிரியை முதியோர் இல்லத்தில் மரணம்

சோதனைக் குழாய் மூலம் 62 வயதில் குழந்தை பெற்ற ஆசிரியை முதியோர் இல்லத்தில் மரணம்
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மூவாற்று புழாவை அடுத்த காவும்கராவைச் சேர்ந்தவர் பவானியம்மா, (வயது 76), ஆசிரியை.

இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதையடுத்து ஆஸ்பத்திரியில் பவானியம்மாவும், அவரது கணவரும் சிகிச்சை பெற்றனர். இருந்தும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் பவானியம்மாவின் கணவர் அவரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். 2-வது திருமணம் செய்த பின்பு பவானியம்மாவுக்கு குழந்தை பிறக்கவில்லை.

அப்போது குழந்தை இல்லாதவர்கள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை மருத்துவத்துறை அறிமுகப்படுத்தியது.

இதனை அறிந்த பவானியம்மா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்த போது, அவருக்கு 62 வயது ஆகி இருந்தது.

இந்த வயதிலும் துணிச்சலாக முயற்சி செய்து சோதனை குழாய் மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி பவானியம்மாவுக்கு குழந்தை பிறந்தது. இது அப்போது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியானது.

வயதான பெண்களில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்ற உலகின் 3-வது பெண் என்ற பெருமை பவானியம்மாவுக்கு கிடைத்தது.

இந்த பெருமையுடன் தனது குழந்தைக்கு கண்ணன் என்ற பெயரிட்டு பவானியம்மா வளர்த்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக கண்ணன், பிறந்த 18 மாதங்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டான். இதற்காக சிகிச்சை பெற்றும் பலனின்றி பரிதாபமாக இறந்து போனான்.

62 வயதில் ஆண் குழந்தைக்கு தாயாகி பாராட்டு பெற்ற பவானியம்மா, 64-வது வயதில் மீண்டும் தனிமைக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு சொந்த ஊரில் இருந்து மன்னந்தாவடி என்ற ஊருக்கு குடி பெயர்ந்தார். அங்கு பள்ளி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வாழ்க்கையை ஓட்டினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவானியம்மாவும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் தனியாக அவதிப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வயநாடு பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை பவானியம்மா பரிதாபமாக இறந்தார்.

முதியோர் இல்ல நிர்வாகிகள் பவானியம்மாவின் உறவினர்களுக்கு இத்தகவலை தெரிவிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

62 வயதில் குழந்தை பெற்றும் இப்போது யாருமின்றி பவானியம்மா இறந்து போனது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்