பயிற்சி…இளம் இந்தியா அதிர்ச்சி! * ஆஸி.,யிடம் தோல்வி..

சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 17ல், சென்னையில் நடக்கவுள்ளது. இதற்கு முன், இந்தியா போர்டு பிரசிடென்ட் லெவன், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பயிற்சி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

வார்னர் அரை சதம்:

ஆஸ்திரேலிய அணிக்கு ஹில்டன் டக்–அவுட்டானார். பின், இணைந்த வார்னர், கேப்டன் ஸ்மித் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 11 பவுண்டரி விளாசிய வார்னர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில்’ ஸ்மித் (55) சிக்கினார். மேக்ஸ்வெல் 14 ரன்களில் திரும்பினார்.

ஸ்டாய்னிஸ் அபாரம்:

டிராவிஸ் ஹெட் (65) அரை சதம் கடந்தார். குஷாங்க் படேல், பந்தில் வேட் (45) அவுட்டானார். 4 பவுண்டரி, 5 சிக்சர் விளாசிய ஸ்டாய்னிஸ் 76 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஒவரில் 7 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்தது. பால்க்னர் (8), ஆஷ்டன் ஏகார் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், குஷாங்க் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கர்னேவர் ஆறுதல்:

கடின இலக்கை விரட்டிய இளம் இந்திய அணிக்கு ராகுல் திரிபாதி (7) ஏமாற்றினார். ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (43), மயங்க் அகர்வால் (42) ஓரளவு கைகொடுத்தனர். நிதிஷ் ராணா (19) ரன்–அவுட்டானார். ஆஷ்டன் ஏகார் ‘சுழலில்’ கேப்டன் குர்கீரத் சிங் (27), சிவம் சவுத்ரி (4) சிக்கினர். வாஷிங்டன் சுந்தர், 11 ரன்களில் வெளியேறினார்.

அக்சய் கர்னேவர் (40) ஆறுதல் அளித்தார். முடிவில், இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 48.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. குஷாங்க் படேல் (41) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆஷ்டன் ஏகார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

சபாஷ் சுந்தர்

நேற்றைய பயிற்சி போட்டியில் தமிழக ‘சுழல்’ வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். சென்னையை சேர்ந்த இவர், 8 ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். 23 ரன் மட்டுமே விட்டுத்தந்தார். கேப்டன் ஸ்மித், மேக்ஸ்வெல் என முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார்.

கடந்த முறை ஐ.பி.எல்., தொடரில் ஸ்மித் தலைமையிலான புனே அணியில் இடம்பிடித்திருந்தார். இந்த அனுபவம் இவருக்கு கைகொடுத்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்