பாபர் ஆஸம் பிரமாதமான ஆட்டம்: உலக லெவன் அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

தங்கள் நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வரும் முகமாக நடத்தும் டி20 தொடரின் முதல் போட்டியில் உலக லெவன் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.

7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாகவே 9,000 போலீஸ் அதிகாரிகள், துணை ராணுவப்படையினர் லாகூர் மைதானப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் ரசிகர்களை அச்சுறுத்தவில்லை மாறாக அவர்களது உற்சாகத்தைக் கூட்டவே செய்தது.

உலக லெவன் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் டாஸ் வென்று முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார், பாகிஸ்தான் அணி பாபர் ஆஸமின் 52 பந்து 86 ரன்களில்னால் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது. தொடர்ந்து ஆடிய உலக லெவன் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து தோல்வி தழுவ, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்ட பாபர் ஆஸம், அகமத் ஷெசாத் (39) ஆகியோர் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 122 ரன்களைச் சேர்த்தனர். சாம்பியன் டிராபியில் இந்தியாவின் கனவுகளைத் தகர்த்த ஃபகார் ஜமான் 8 ரன்களில் வெளியேறினார். ஷோயப் மாலிக் கடைசியில் தான் ஏன் அணிக்கு முக்கியமானவர் என்பதை நிரூபிக்கும் விதமாக 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 20 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். பாபர் ஆஸம் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசினார். பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

உலக லெவன் அணி தமிம் இக்பாலின் 3 பவுண்டரிகளுடன் கூடிய 18 ரன்களுடனும், ஹஷிம் ஆம்லாவின் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கூடிய 17 பந்து 26 ரன்களுடனும் அதிரடித் தொடக்கம் கண்டது. ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரும்மான் ரயீஸ் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி உலக லெவனுக்கு நெருக்கடி கொடுத்தார்.

கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 4 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 18 பந்துகளில் 29 ரன்களையும், அபாய வீரர் டேரன் சமி 16 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களூடன் 29 ரன்களையும் எடுத்தாலும் வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. சொஹைல் கான், ஷதப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உலக லெவன் அணி 20 ஓவர்களில் 177/7 என்று முடிந்தது. பாகிஸ்தான் 20 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் பாபர் ஆஸம்.

பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர், ஆஸம், அஷ்ரப் ஸமான், ஷதாப், ரயீஸ், ஹசன் அலி ஆகியோர் தங்கள் சொந்த நாட்டில் முதல் சர்வதேச போட்டியில் ஆடினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்