20வது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் சரியான காரணத்தைக் கூற வேண்டும்:கி.மா.விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம்

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்ற காரணத்தை சரியாக கூறவேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் ஒரே சீராக தேர்தல் நடைபெற வேண்டும், மாகாண சபைகளைக் கலைக்கின்ற விடயம் என்பது தானாகவே சட்டமுறையின் படி நடைபெறுவது என்ற காரணங்களில் ஏதாவது ஒன்றுக்கு நாங்கள் விருப்பம் இல்லை என்று சொன்னால் தான் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை – பலாச்சேலை வீதி செப்பனிடும் பணியை இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடரந்து உரையாற்றுகையில் – எந்தவொரு அரசியல் நடவடிக்கையாக இருந்தாலும் அதன் இறுதியில் தீர்வு ஒன்றை அடைவது அந்தத் தீர்வை எழுத்துருவத்திலே நடைமுறைப்படுத்துவது என்பதே இறுதி நடவடிக்கையாக இருக்கும். அந்த விடயத்தில் எமது உலகம் வியக்கத்தக்க விடுதலைப் போர்கள் சரியான இடத்தை எய்திருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாவே இருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் எமது உறவுகள் விட்ட அந்தத் தொடர்ச்சியை அஞ்சல் ஓட்டம் போல இப்போது அடுத்த கைக்கு மாறி அந்தச் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசியலமைப்பு ஆக்கங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே 20வது திருத்தச் சட்டம் வந்திருக்கின்றது. இந்த சட்டத்திற்கு பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டன மாகாணசபைத் தேர்தல்கள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதே உண்மை. பாராளுமன்றத் தேர்தல் தொகுதி அடிப்படையிலும், உள்ளுராட்சித் தேர்தல் வட்டாரங்கள் அடிப்படையிலும் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் ஒரு கூட்டத்தில் தெரிவிக்கும் போது இவ்வாறான முறைகள் இல்லை என்றால் இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்திற்கோ மாகாண சபைக்கோ பண முதலைகளும் வியாபாரிகளும் தான் வருவார்கள் அவர்கள் பணத்தைக் கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கி அங்கு வந்தார்கள் என்றால் நிர்வாகம் தொடக்கம் அரசியல் வரையிலே ஒரு ஊழல் நிறைந்ததாக மாறும் என்று தெரிவித்திருந்தார்.

மாகாணசபைத் தேர்தல்களை ஒரே சீராக்க வேண்டும் என்பதற்காக 20ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் மாகாணசபைத் தேர்தல்கள் மாகாண வட்டாரங்கள் அடிப்படையிலே தான் நடைபெறும்.

முன்பிருந்த ஜனாதிபதி அவர்கள் அவருக்கு தகுந்தாற்போல் சில குறிப்பிட்ட இடங்களுக்கு தேர்தல் நடத்துவது பின்னர் வேறு இடங்களுக்கு தேர்தல் நடத்துவது என்று செயற்பட்டார். அவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் இந்தச் சட்டத்தின் மூலம் முடக்கப்படும்.

20வது திருத்தச் சட்டம் தொடர்பான சில சர்ச்சைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாங்கள் தான் திருத்தம் கோரினோம். முன்பு மாகாண சபை கலைக்கும் அதிகாரம் ஆளுனர் முதலமைச்சருடைய ஆலோசனையின் போரில் கலைக்க முடியுளும் ஆனால் 20வது திருதத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் மூலம் கலைக்கலாம் என்றிருந்தது. இது ஜனநாயகத்திற்கு மீறிய செயற்பாடு என்று நாங்கள் சொன்னோம் அந்த அடிப்படையில் 20வது திருத்தத்தை நாங்கள் உடனடியாக அனுமதிப்பதற்கு தயாராக இல்லை.

மற்றைய கட்சிகளைப் பொறுத்தளவில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை. ஏன் இவ்வாறு பிரச்சினை வந்ததென்றால் முன்பெல்லாம் அரசாங்கம் ஒரு சட்டத்தை தயாரித்தால் மாகாணசபையிலோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களிலே இருக்கின்ற அந்த அரசாங்கத்தின் கட்சிகள் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இம்முறை நாங்களும் ஆளுங்கட்சியோடு இணக்கப்பாட்டோடு இருந்த காரணத்தினால் எங்களுடைய சொல்லையும் அவர்கள் கேட்டாக வேண்டும். நாங்கள் தான் திருத்தத்தை விலியுறுத்தினோம். அதனை அவர்கள் ஏற்றாகவேண்டி இருந்தது.

நாங்கள் கேட்ட திருத்தம் மாகாணசைப கலைக்கப்படுவதும், நீடிக்கப்படுதலானது எல்லையில்லாமல் நீடிக்கப்படக் கூடாது இந்த சட்டமூலம் சட்டமாக்கப்படும் காலத்தில் இருந்து ஓராண்டு வரையில் மாகாணசபை நீடிக்க முடியும் எனவும் கலைக்கப்படுகின்ற அதிகாரம் தொடர்பாகவும் உயர் நீதிமன்றத்திலே வைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியதாக 20வது திருத்தச் சட்டம் வர வேண்டும் என்றும் அவ்வாறு வருகின்ற அடிப்படையில் அதற்கான ஆதரவை வழங்குகின்றோம் என்ற அடிப்படையில் தான் மாகாணசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேல், சப்பிரகமுவ மாகாணசபைகளும் இதே தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றன.

எமது தலைமையும் இதற்கு ஏற்ற விதத்தில் எங்களுக்கு நெறிவுறுத்தலை வழங்கியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுக்கமாகவும் ஒன்றிணைந்த ரீதியிலும் செயற்படும். எமது மக்களின் உரிமை தொடர்பாக எமது தலைமை செயற்படுகின்றது எமது மக்களின் அபிவிருத்திகள் தொடர்பாக எமது ஒவ்வொரு உறுப்பினர்களும் செயற்படுவார்கள்.

சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எப்படி எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று பார்க்கின்றார்கள். நாங்கள் கொண்டு வந்தவர்களே வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு எதிராகச் செயற்படுகின்றார்கள். எங்களுக்குள்ளே இருந்து விமர்சித்தவர்கள் மக்களின் ஆணையால் இன்று வெளியில் சென்று விமர்சிக்கின்றார். இவ்வாறெல்லாம் விமர்சிப்பவர்கள் கால கட்டத்தில் இவற்றை உணர்ந்து கொள்வார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று பல கேட்கின்றார்கள். நாங்கள் எவ்வளவோ விடயங்களைச் சொல்ல முடியும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான நடவடிக்கை என்பது மிகவும் கடினமான விடயம் ஆனால் அதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம். அரசியற் கைதிகளாக சிறையில் வாடும் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா, நிலங்கள் எல்லாம் விடுவிக்க்பட்டதா, என்ற கேள்விகளுக்கு முழுமையாக ஆம் என்றும் விடை சொல்ல முடியாது ஆனால் இல்லை என்றும் சொல்லவும் முடியாது. குறிப்பிட்ட அளிவிற்கு காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, குறிப்பட்ட அளவிற்கு இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறான விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே மேற்கொள்ளப்பட்டது. இதனை எம்மை விமர்சிப்பவர்களும், மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்